டபுள் ஜாக்பாட்!
சமீப காலமாக லீட் ரோலில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் படங்கள் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை பெறவில்லை. இதற்கு, அந்த படங்கள் எல்லாம் ஓ.டி.டி.யை மனதில் வைத்து எடுக்கப்பட்டவை, "ரிலீஸ் சமயத்தில் ஓ.டி.டி. நிறுவனங்கள் விதித்த சில கட்டுப்பாடுகளால் திரையரங்குகளில் வெளியிட நேர்ந்தது' என காரணங்கள் சொல்லப்படுகிறது. இருப்பினும் கதை நன்றாக இருந்தால் எங்கு வெளியானாலும் வெற்றிபெறும் என்கிறது கோலிவுட் வட்டாரம். பட தோல்வியினால் சற்று அப்செட்டில் இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், ஹீரோயின் சப்ஜெக்ட் உள்ள படம் தனக்கு இனிமேல் வருமா என்றளவுக்கு யோசிக்கத் தொடங்கிவிட்டாராம். மேலும் அடுத்த பட கதைத் தேர்வில் மிகவும் கவனமாக இருந்து வருகிறார். ஆனால் அதெற்கெல்லாம் இடம் கொடுக் காமல் ஜாக்பாட் டாக ஹீரோ யினுக்கு முக்கியத்துவம் தருகிற இரண்டு கதைகள் அவரது வாசல் தேடி வந்துள்ளது. இதை சற்றும் எதிர் பாராத ஐஸ்வர்யா, கதையைக் கேட்டு மிகவும் பிடித்துப்போக இரண்டு படங்களுக்கும் ஓ.கே. சொல்லிவிட்டார்.
இந்த இரண்டு படங்களையும் ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக தயாரிப்பாளர் ஜி.டில்-பாபு தயாரிக்கிறார். இயக்குநர்களை சஸ்பென்சாக வைத்துள்ள அவர் சர்ப்ரைஸாக வெளியிட திட்டமிட்டுள்ளார்.
மீண்டும் பாலிவுட்!
சிறுத்தை சிவா இயக்கும் "கங்குவா' படத்தில் நடித்துவரும் சூர்யா, அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதை முடித்துவிட்டு வெற்றிமாறனின் "வாடிவாசல்' படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. இதனிடையே பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்திலும் டோலிவுட் இயக்குநர் போயப்பட்டி சீனு இயக்கத்திலும் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அவர் தற்போது மகாபாரதத்தை அடிப்படையாக கொண்டு "கர்ணா' என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக படமெடுக்க ஆயத்தமாகி வருகிறார். இதில் சூர்யாவை கமிட் செய்துள்ளதாக முன்பு தகவல் வெளியான நிலையில் நீண்டநாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அண்மையில் மும்பை பறந்த சூர்யா, அதற்கான இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இப்படம் மூலம் "ரக்தா சரித்ரா 2'க்கு, பிறகு 13 ஆண்டுகள் கழித்து பாலிவுட்டில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படம் பான் இந்தியா படமாக பெரிய பொருட்செலவில் உருவாகிறது. இப்போது இந்தியில் உருவாகி வரும் "சூரரைப் போற்று' ரீமேக்கில் கேமியோ ரோலில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
த்ரிஷா ஓ.கே!
மணிரத்னம் இயக்குவதைத் தாண்டி "மெட்ராஸ் டாக்கீஸ்' என்ற நிறுவனம் மூலம் பல படங்களைத் தயாரித்து வருகிறார். "அலைபாயுதே' படத்திலிருந்து தொடர்ச்சியாக தான் இயக்கிய படங்களை அவரே தயாரித்து வந்தநிலையில், தற்போது இயக்கவிருக்கும் கமலின் 234-வது படத்திலும் தொடர்கிறார். இப்படத்தில் கதா நாயகியாக த்ரிஷா, நயன்தாரா என முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியில் பாலிவுட் ஹீரோயின் வித்யாபாலனை கமிட் செய்துள்ளாராம். இந்நிலையில் இப்படம் அல்லாது வேறொரு படத்தில் த்ரிஷாவை கமிட் செய்துள்ளாராம் மணிரத்னம். அண்மையில் த்ரிஷாவிடம் பேசி ஓ.கே. வாங்கியுள்ளாராம். த்ரிஷாவும் கமலின் படத்தைத் தவறவிட்டதால் இதை விடக்கூடாது என எண்ணி சம்மதம் தெரிவித்துள்ளார். மணிரத்னம் போலவே இப்படத்தின் பணிகளும் அமைதியாக நடந்து வருகிறதாம்.
கீர்த்தி குஷி!
கீர்த்தி சுரேஷ், சிரஞ்சீவியின் 'போலா சங்கர்', ஜெயம் ரவியின் "சைரன்', உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் முதன்மை கதாபாத்திரத்தில் "கே.ஜி.எஃப்' படத் தயாரிப்பு நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படமான "ரகு தாத்தா', சந்துரு என்பவர் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறார். இதனை தொடர்ந்து "கண்ணிவெடி' என்ற தலைப்பில் முதன்மை கதாபாத்திரத்தில் ஒரு படம் நடிக்கிறார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க கணேஷ்ராஜ் இயக்குகிறார்.
இந்நிலையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான "தசரா' மற்றும் "மாமன்னன்' படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ளதால் இதுவரை வாங்கிய சம்பளத்தை விட ஒரு மடங்கு அதிகம் கூட்டியுள்ளாராம். கீர்த்தியின் வளர்ச்சியை அறிந்த தயாரிப்பாளர்கள், அதைக் கொடுக்கத் தயாராக உள்ளார்களாம். இதனால் மேலும் தனது மார்க்கெட் மற்றும் இமேஜ் உயரும் என நம்பிக்கையில் கீர்த்தி சுரேஷ் குஷியாக உள்ளார்.
-கவிதாசன் ஜெ.